சென்னை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது
செவ்வாய், 27 அக்டோபர் 2009 (12:17 IST)
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. 3 குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை அவுனியாபுரத்தை சேர்ந்தவர் பரணிதரன். இவரது மனைவி வாணி (28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தலைபிரசவத்துக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பகல் 2.15 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
நேற்றிரவு 7 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 8.45 மணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறகு மீண்டும் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், பிரசவ வார்டுக்கு கொண்டு சென்றனர். 9.15 மணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டு 9.25 மணிக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது.
முதலில் பிறந்த ஆண் குழந்தையின் எடை 1.250 கிலோ. 2-வது பெண் குழந்தையின் எடை 1.70, 3-வதாக பிறந்த பெண் குழந்தை 1.40 கிலோ எடை இருந்தது. எடை குறைவாக இருந்தாலும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன. எடை குறைவு காரணமாக அவற்றின் ஆரோக்கியத்தை கருதியும் இன்குபேட்டரில் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மருத்துவர் சாந்தி தினகர் கூறுகையில், ''வாணிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகள் 3 பேரும் சுகமாக உள்ளனர். குழந்தைகள் நல மருத்துவமனையில் “இன்குபேட்டரில்” பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறார்கள்'' என்றார்.