திருவண்ணாமலையில் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு
ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (15:15 IST)
திருவண்ணாமலை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் ஊழல் நடைபெற்று வருவதைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
இந்தப் பணிகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், பல இடங்களில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால், காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், உயிர்ச்சேதம், உட்பட பல இடையூறுகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
திருவண்ணாமலை நகராட்சியில் நிலவும் அவல நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், இதுநாள் வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைக் கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், வரும் 27ஆம் தேதி காலை 10 மணியளவில், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.