புவனேஸ்வரி விவகாரம்: நடிகைகள் மானநஷ்ட வழக்கு தொடர நடிகர் சங்கம் தீர்மானம்

வியாழன், 8 அக்டோபர் 2009 (09:54 IST)
நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தில், தவறாக விமர்சிக்கப்பட்ட நடிகைகள் தனித் தனியே மானநஷ்ட வழக்கு தொடர்வது என நடிகர் சங்க கண்டன கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், மற்ற சில நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகளின் பெயர்கள் படங்களுடன் வெளியானது. இது நடிகர்-நடிகைகள் மத்தியில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகைகளின் பெயரை வெளியிட்ட நாளிதழைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று மாலை கண்டன கூட்டம் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள். அவதூறு கூறப்பட்ட நடிகைகளும் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள்.

கண்டன கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மேடையில் படித்தார். அதில், தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நாளிதழின் செய்தி ஆசிரியரை கைது செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்த நாளிதழை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், விழாக்களில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திரையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகளிடம் ஆதரவு கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ரசிகர்கள் இன்று முதல் அந்த நாளிதழுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும், தவறாக விமர்சிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலையவும், திரையுலகினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கும் ஆளாக்கி, பெண்களை இழிவுபடுத்திய அந்த நாளிதழை ஏன் தடை செய்யக்கூடாது? என்று பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்