ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய சரத்குமார் வலியுறுத்தல்

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (12:43 IST)
''உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய 'ஆன்லைன்' வர்த்தகத்திற்கு இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்க வேண்டும்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

FILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிசி விலை ஏற்கனவே இறக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கிறது. அதிக மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி ஒரு கிலோ ரூ.20 முதல் 22 வரையாக இருந்தது. இப்போது ரூ.35 முதல் 40 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் ஒரு கோடி டன் அளவுக்கு அரிசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மத்திய அமை‌ச்ச‌ர் அறிவித்து இருப்பது நமக்கு எல்லாம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு என்ன காரணங்கள் என்பதை அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரிசி ஏற்றுமதிக்கு தடை இருக்கின்றபொழுது பாசுமதி அரிசி மட்டும் பிரத்யேகமாக ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. பாசுமதி அரிசி என்கிற பெயரில் சன்னரக அரிசியும், சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுவிடாமல் மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற அரிசி ரூ.40-க்கும், ரூ.40-க்கு விற்ற துவரம் பருப்பு ரூ.85-க்கும், ரூ.40-க்கு விற்ற உளுந்து ரூ.65-க்கும், ரூ.13-க்கு விற்ற சர்க்கரை ரூ.29 என உயர்ந்து இருப்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

உலக அளவிலான நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், மோர் போன்ற நிறுவனங்களும் சில்லரை வணிக கடைகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றன. இதுபோன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சேமிப்பு வரையறை இல்லை. எனவே, பல்வேறு துறை தொழில்களில் ஈடுபடும் இந்த நிறுவனங்களிடம் பல லட்சம் கோடி புரள்கிறது. இவர்கள் அளவுக்கு மீறி பொருட்களை வாங்கி ஸ்டாக் வைக்கும் காரணங்களினாலும் அரிசி, பருப்பு போன்ற பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய ஆன்லைன் வர்த்தகத்திற்கு இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்க வேண்டும். அரிசி விலை மேலும் உயர்ந்துவிடாமல் தடுக்கவும் முதலமைச்சர் கருணாநிதி தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் நெல் உற்பத்தியை அதிகப்படுத்திட அதிகாரிகளை கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று சரத்குமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்