''இலங்கை தமிழர்களுக்காக என்னையே அர்ப்பணித்து உயிரை கொடுக்க முன் வந்துள்ளேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
இலங்கையில் தமிழர்களை காப்பாற்ற உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கோரி இன்று காலை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஈழத் தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்று வரை மகிழ்ச்சி தரும் வகையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர் பார்த்திருந்தேன்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த பிறகும், சிங்கள அரசு, போரை நிறுத்த முடியாது என்று அறிவித்துள்ளதாக பத்திரிகைள், தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்தேன்.
ராஜபக்சே உயிர் பலி வாங்குவதில் என்னையும் நான் பலியாக்கி கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்காக நான் என்னையே அர்ப்பணித்து உயிரை கொடுக்க முன் வந்துள்ளேன். என் அன்பான வேண்டுகோள் என்னோடு அமைச்சர்கள், தொண்டர்கள் யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டார்.