தைரியம் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள் : விஜயகாந்த் சவால்

திங்கள், 20 ஏப்ரல் 2009 (10:43 IST)
தி.மு.க., அ.தி.மு.க., கட்சி தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் தே.மு.தி.க.வைபோல் தனித்து போட்டியிடவேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் பேசினார்.

ஈரோடு மாவட்டம் புன்செய்புளிம்பட்டி, நம்பியூர், காசிபாளையம், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், ஈரோடு ஆகிய பகுதிகளில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் பிரச்சாரம் செய்தார்.

webdunia photoWD
அப்போது அவர் பேசுகை‌யி‌ல், சத்தியமங்கலத்திற்கு நான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டிற்கு முன் ஊட்டியில் இருந்து பைக்கில் வந்து இங்கிருந்து தெங்குமரஹடா சென்றிருக்கிறேன். 25 ஆண்டிற்கு முன் அந்த ரோடு எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறது. விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ரயில்பாதை இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நதிகள் இணைக்கப்படவில்லை. இதை இணைப்பதாக ஒவ்வொரு கட்சிகளும் சொல்லுகின்றன. ஆனால் இதுவரை செய்யவில்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதி நாற்பதும் வேண்டும் என்கிறார். இதுவரை கொள்ளையடித்தது போதாத இன்னும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டுமா?.

ஜெயலலிதாவிற்கு உள்ள கோடநாடு எஸ்டேட் போல் தனக்கும் எஸ்டேட் வேண்டும். அதை வாங்கவே ஒரு லட்சம்கோடி ஸ்பெக்ட்ராம் ஊழல் செய்த ராசாவை பெரம்பலுரில் இருந்து நீலகரிக்கு மாற்றி போட்டியிட வைத்துள்ளார்.

நாற்பதும் ஜெயிக்க வைத்தால் கரு‌ம்புக்கும் நெல்லுக்கும் கூடுதல் விலை கிடைக்க வலியுருத்துவதாக கருணாநிதி கூறுகிறார். இதுவரை அவர் ஏன் அதை செய்யவில்லை.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் பாலைவமாக உள்ள தமிழகம் சோலைவனமாகும் என கருணாநிதி கூறியுள்ளார். அப்படியெனில் தற்போது தமிழகம் பாலைவனமாக உள்ளதை அவரே ஒப்புக்கொள்கிறார். இன்னும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கவில்லை. இவர்களுக்கு திறமை இருந்தால் தி.மு.க., அ.தி.மு.க., தனித்து போட்டியிடட்டும்.

எனக்கு சம்பாதிக்கும் எண்ணம் இருந்திருந்தால் எ‌வ்வளவோ சம்பாதித்திருப்பேன். இந்த தேர்தலிலே பல கோடி வாங்கிருப்பேன். ஆனால் எனக்கு என் மக்கள் வளமாக இருக்கவேண்டும். இளைஞர்கள், பெண்கள் அதிகமாக கூடியுள்ளீர்கள். நீங்கள் நினைத்தால் அந்த மாற்றம் நடக்கும்.

நாங்கள் வெற்றிபெற்றால் சமசீர் கல்வி கொண்டு வருவோம். படிக்காத இளைஞர்களுக்கும் வேலை கொடுப்போம். மக்கள் காந்தி படமிட்ட பணத்தை பார்த்து வாக்களிக்ககூடாது எ‌ன்று விஜயகாந்த் பேசினார்.