தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ம.தி.மு.க கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ இன்று நேரில் ஆஜராகி வாதாடினார்.
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத்தை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி சசிகலா சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், எனது கணவர் இலங்கை இனப்படுகொலைக்குக் காரணமான, அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக மட்டுமே திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் பேசவில்லை. இந்நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவரது கைதை சட்ட விரோதம் என்று அறிவித்து விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் தர்மாராவ், சி.பி. செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சசிகலா சார்பில் வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார்.
நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறு என்றும் பழிவாங்கும் நடவடிக்கையாக அவரை கைது செய்துள்ளனர் என்றும் வைகோ வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.பி. செல்வம், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதிகளுக்கு அனுப்புகிறோம் என்றார்.
அதற்கு வைகோ, நீங்களே விசாரிக்கலாம். நாங்கள் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்றார்.
ஆனாலும் நீதிபதி, வேறு நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றுவதாக கூறினார். இதனால் வழக்கு விசாரணை நாளை வேறு நீதிமன்றத்தில் நடக்கும் என்று தெரிகிறது.