ஐ.மு. கூ‌ட்ட‌ணி மீண்டும் ஆட்சிக்கு வரும் - அன்புமணி

வெள்ளி, 6 மார்ச் 2009 (14:20 IST)
எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருப்பதன் மூலம் தாம் திருப்தி அடைவதாகக் கூறினார்.

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்து கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், முழு அளவில் அந்த சட்டம் அமலாவதற்கு சில காலம் ஆகலாம் என்றும் அன்புமணி கூறினார்.

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் நல்லுறவு இருப்பதாகவும், அரசியல் வேறு; தனிப்பட்ட நட்பு வேறு என்ற கலாச்சாரம் தமிழகத்திலும் வர வேண்டும். அதற்கு இளைஞர்களாகிய நாம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுக்குழு கூட்டத்தில் அதுபற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும். விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பதிலளித்தார்.

வரும் தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களைக் காட்டிலும் அதிக தொகுதிகளை பாமக கேட்குமா? என்று கேட்டதற்கு, அதுகுறித்தும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்