இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி நடக்க இருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டதால் வரும் 9ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசை கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும்,
இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன்.
இந்த நிலையில் அன்றைய தினம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்கள் மேற்கண்டவாறு உரிய ஏற்பாடுகளை செய்து உண்ணாவிரத போராட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.