வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் - காவல‌‌ர்க‌ள் மோதல் போக்கை கைவிடாவிட்டால் உண்ணாவிரதம்: கருணாநிதி

திங்கள், 23 பிப்ரவரி 2009 (12:20 IST)
வழ‌க்க‌றிஞ‌ர்களு‌ம், காவ‌ல்துறை‌யின‌ரும் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில் மருத்துவமனையி‌ல் உண்ணா நோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, அத‌ற்கான தே‌தியை ‌விரை‌வி‌ல் அ‌‌றி‌வி‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையில் ராஜபக்சே நடத்துகின்ற தமிழினப் படுகொலையைக் கண்டித்து இங்குள்ள தமிழர்களை, கட்சி சார்பற்ற முறையில், அனைவரையும் அணிவகுத்து, தமிழக அரசின் சார்பிலேயே மத்திய அரசை வலியுறுத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென்று கோரி நடத்த தொடங்கிய அறவழி கிளர்ச்சியில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாக சொல்லி விட்டு, ஆரம்பத்திலேயே அந்த அணியைச் சிதைக்க இலங்கை தமிழர் பிரச்சினையை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள இரண்டு, மூன்று நண்பர்கள் ஈடுபட்டதை தமிழ்நாடு நன்கறியும்.

ஒன்றுபட்டு எல்லோரும் ஒருமித்த குரல் கொடுப்போம் என்று அரசின் சார்பில் வேண்டியபோது, அதற்கு இணங்காமல் அவர்கள் தனித்தே நின்று குரல் கொடுத்தார்கள். அனைத்து‌க் கட்சிகளின் மனித சங்கிலிக்கு வர மறுத்தார்கள். அனைத்து‌க் கட்சி கூட்டத்திற்கு வராமலே ஒதுங்கினார்கள். டெல்லியில் பிரதமரை சந்திக்க சென்ற போது வர மறுத்தார்கள்.

இலங்கை பிரச்சனை என்றால் அது தங்களால் மட்டுமே நடைபெற வேண்டும், தி.மு.க- காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டே இன்று நேற்றல்ல, இலங்கையிலே பிரச்சனை தோன்றிய காலத்திலே இருந்து தங்களுக்கென்று தனி வழி வகுத்துக் கொண்டவர்கள், இப்போதும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். தமிழர்களின் ஓட்டுமொத்த உணர்ச்சியின் காரணமாகத்தான் தம்பி முத்துக்குமார் தீக்குளித்தார். அவர் குடும்பத்திற்கு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் நிதியை வாங்கக் கூடாது என்று முத்துகுமாரின் குடும்பத்தாரைத் தடுத்து விட்டார்கள்.

இதிலிருந்தே அவர்கள் இலங்கை பிரச்சனையை தொடக்கத்திலேயே கட்சி பிரச்சனையாக கருதி செயல்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையிலே தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து, தமிழ்நாட்டில் தங்கள் அரசியலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.

அதை விட `சூன்யக்காரர்'- சூழ்ச்சிக்காரர் என்று ஒரு காலத்தில் அவர்களாலே கூறப்பட்ட ஒருவருக்கு வெண்சாமரம் வீசி, அவரது வெண்கொற்றக்குடையின் கீழ் தமிழ்நாட்டை எப்படியாவது அடகு பொருளாக வைத்து விட வேண்டுமென்பது தான் அவர்களது குறிக்கோள்.

அதனால் தான் முழுக்க முழுக்க இங்கேயிருக்கிற தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடத்திலே தவறான பிரசாரங்களை செய்தும், யார் தமிழ்நாட்டில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்து கொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதன் மூலம் சட்டம், ஒழுங்கு கெடுவதற்கு வழி வகுத்து, அதை பூதாகாரமாக ஆக்கி- தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கனவு காணுகிறார்கள்.

தங்களுடைய கனவு வெற்றி பெற இப்போது அவர்களுக்கு கிடைத்திருக்கிற ஆயுதம் உண்மையிலேயே இலங்கை தமிழர் பாதுகாப்பு அல்ல என்பதற்கு உதாரணம்- எதிர்பாராத விதமாக திடீரென்று துரதிருஷ்டவசமாக வழக்கறிஞர்களுக்கும், காவ‌ல்துறை‌யினரு‌க்கும் இடையே ஏற்பட்ட மோதல் அவர்களுக்கு பிரதான ஆயுதமாக கிடைத்திருக்கின்றது.

அறுவை சிகிச்சை செய்து கொண்டு, இன்னும் தையல் கூடப் பிரிக்காத சூழ்நிலையில் நாள்தோறும் உடல் நலிவோடு மருத்துவமனையில் இருக்கின்ற என் மனம் நோகும்படி என்னென்ன காரியங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டி விடப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவார்கள். இதற்கு நல்லறிவாளர்களாம், வழக்கறிஞர் பெருமக்களும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை நண்பர்களும் தங்களை அறியாமல் பலியாகி விடக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

இப்போது அவர்களை தூண்டி விட்டு இலங்கை தமிழர்களை மறந்து விட்டு ஒரு கிளர்ச்சி நடத்த நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த சில குழுவினர் புறப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய வஞ்சக எண்ணத்திற்கு வழக்கறிஞர்கள் இரையாகி விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக்கொண்டு வருகிறேன். ஆனால் அதற்கான நல்ல சூழ்நிலை இன்னும் உருவாகமல் இருப்பதற்கு சில நச்சு நினைப்பினரே காரணம் என்பது எனக்கு புரிகிறது.

ஆனால் அந்த காரணத்தை வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று தான் வருந்துகிறேன். நான் எதிர்பார்ப்பது, வேண்டுவது, நடக்க வேண்டுமென்று கருதுவது எல்லாமே தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு அடித்தட்டிலே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான்.

அதற்கு இடம் தாராமல் இது போன்ற பிரச்சனைகளை- மோதல் என்ற நிலையிலே உருவாக்கி- சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கு அறிந்தோ, அறியாமலோ காவல்துறையினர் ஆனாலும் சரி, வழக்கறிஞர்கள் ஆனாலும் சரி பலியாகி விடக்கூடாது. இருவரும் இந்த அரசில் சகோதரர்கள் போல ஒன்றுப்பட்டு நற்பணி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய மன சாட்சியிலிருந்து வெளிப்படுகின்ற வேண்டுகோள்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அவர்களும் மற்றும் பல நீதியரசர்களும், ஒரு சுமூகமான சூழ்நிலை இந்த பிரிவினருக்கிடையே ஏற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை மாற்றி அவர்களை மீண்டும் போராட செய்ய தூண்டிக்கொண்டிருக்கும் சிலர் அறிக்கைகளை விட்டு கொண்டிருக்கிறார்கள். வழக்கறிஞர்கள்- காவல்துறையினர் என்ற இந்த இருசாராரிடையே தூண்டி விடுகின்ற இந்த கும்பலை பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள், ஜனநாயக நெறிமுறைகளை உயர்வடைய செய்ய ஒத்துழையுங்கள் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்.

இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க ஆர அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம் என்று தான் நான் கூறிக்கொள்கிறேன். இதனையேற்று என்னுடைய வேண்டுகோளின் படி நல்லோர் சிலர் உங்களிடையே எடுத்து சொல்லுகின்ற அறிவுரைகளை பின்பற்றி ஒன்றுபடுவீர்களேயானால் எனக்கு மகிழ்ச்சி.

அப்படி ஒன்றுப்பட முடியாவிட்டால் நீங்கள் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில் மருத்துவமனையிலே இருக்கின்ற நான் உண்ணா நோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன். அந்த முடிவை நான் மேற்கொள்வதா இல்லையா என்பதை நீங்கள் அளிக்க இருக்கின்ற விடையின் மூலம் தான் தெளிவு பிறந்து, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறிக்கொள்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.