மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 8ஆம் தேதி பேரணி
வியாழன், 5 பிப்ரவரி 2009 (10:47 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியை நிலைநாட்டவும், தமிழர் வாழ்வுரிமையை பெற்றுத்தரக் கோரியும் இலங்கைத் தமிழர் நல உரிமைப்பேரவையின் சார்பில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ஆம் தேதி சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
இது தொடர்பாக தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியை நிலைநாட்டவும், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும்,
தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு ஜனநாயக முறையில் நிரந்தரத் தீர்வு காணவும் வலியுறுத்தி தென் சென்னையில் இலங்கைத் தமிழர் நல உரிமைப்பேரவையின் சார்பில் பொருளாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி 8ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, மன்றோ சிலை அருகிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடையும்.
அன்று மாலை 6 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை, சிங்கண்ணத் தெருவில் தி.மு.க. முதன்மைச் செயலர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் முன்னணித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் பேரணி, பொதுக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை அமைப்பின் பெயரால் ஒத்த கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் தென்சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தலைமை நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் சார்பு மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், செயல் வீரர்கள், தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வரவேண்டுமென அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.