இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்து தீக்குளித்த நிலக்கோட்டை வாலிபர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த ரவி (31) என்பவர் நேற்று முன்தினம் உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை இறந்தார். இது குறித்து அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பாரி கூறுகையில், வாலிபர் ரவி இலங்கைத் தமிழருக்காக தீக்குளிக்க வில்லை. 2 வழக்குகளில் ரவி ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர். இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்துள்ளார் என்றார்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வாசுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.