இலங்கையில் நடைபெறும் போரை உடனே நிறுத்த மத்திய அரசை உடனடியாக வலியுறுத்த வேண்டும் என்று கோரி முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் சந்தித்துக் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழர்கள் மீதான தாக்குதல் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இது தொடர்பாக அங்கு நடைபெறும் போரை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்றார்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரிடம் இது குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் இன்று பேசி, இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்து அங்கு அமைதியை ஏற்படுத்தினால் அது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் என்று எடுத்துரைப்பேன் என கருணாநிதி கூறினார்.
டெல்லி சென்று அவர்களை நேரில் சந்திப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போது நேரடியாக சந்தித்து பேச வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்களிடம் தொலைபேசியிலேயே பேசுவேன் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.