மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீர. இளவரசன் (ம.தி.மு.க.) மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தி.மு.க. சாபில் லதா அதியமான், அ.இ.அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க. சார்பில் தனபாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உள்பட 26 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
திருமங்கலம் தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 வாக்காளர்களில், 1 லட்சத்து 38 ஆயிரத்து 369 பேர் வாக்கு அளித்தனர். 88.89 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை மருத்துவ கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் முன்னிலையில் இருந்து வந்தார்.
பிற்பகல் 11.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக .இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் 40,156 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அதிமுக வேட்பாளரை விட லதா அதியமான் 39,266 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வின் வேட்பாளர் தனபாண்டியனுக்கு வெறும் 13,136 வாக்குகளே கிடைத்தன. இவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கை விட இந்த தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.
சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட பத்மநாபன் வெறும் 831 வாக்குகளே பெற்று டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.