புதுச்சேரி சிறையில் கைதி தற்கொலை: 3 வார்டன்கள் தற்காலிக பணி நீக்கம்
புதுச்சேரி சிறையில் ஆயுள் கைதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு காரணமாக 3 வார்டன்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பழைய கடலூர் சாலையை சேர்ந்த முருகன் என்பவருக்கு கொலை வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் காலை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் உள்ள தரைதள அறையில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து துணை ஆட்சியர் விஜயகுமார் பிதூரி, காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி) வாசுதேவராவ், சிறைத்துறை கண்காணிப்பாளர் துர்கா பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்த போது பணியில் இருந்த முதன்மை வார்டன் கிருஷ்ணசாமி, வார்டன்கள் சேகர், பாவாடைசாமி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் துர்கா பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.