சேது சமுத்திர திட்டத்தை பிரதமர் நிறைவேற்றி தர வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல்
வியாழன், 8 ஜனவரி 2009 (15:02 IST)
தமிழகத்திற்கு அறைகூவலான சேது சமுத்திர திட்டம் வெற்றிபெற பிரதமர் மனம் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் உறுதியுடன் இருந்து இந்த திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்றார்.
webdunia photo
FILE
இந்தியாவிலேயே மிக நீளமாக 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் உயர்மட்ட மேம்பால விரைவுச்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை அகற்றுவதற்கும் மற்றும் இந்த பாலம் சென்னை மாநகர மக்களின் நெரிசலை மட்டுமின்றி, துறைமுகம்- மதுரவாயலை இணைக்கும் பாலமாக அமையும். மத்திய-மாநில அரசுகள் இடையே இணைப்பு பாலம் இருப்பதால்தான் இங்கு பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான இத்தகைய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடமும், சோனியாவிடமும் கோரிக்கை வைத்தேன். இலங்கையில் இருப்பவர்களுக்கு அது சங்கடமாக இருந்தாலும் தமிழகத்தின் எதிர்கால வாழ்வுக்கு அது ஒரு இன்ப புதையலாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கொடி தூக்குகிறார்கள். அந்த திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நல்ல தலைவர்களும் தமிழகத்தில் கட்சி நடத்துகிறார்கள். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும். இதற்குரிய உறுதி, திடம் டி.ஆர்.பாலுவிடம் இருக்கிறது.
தமிழகத்திற்கு அறைகூவலான இந்த திட்டம் வெற்றிபெற பிரதமர் மனம் வைக்க வேண்டும். அவர் உறுதியுடன் இருந்து இந்த திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும். இப்போது நடக்கும் அடிக்கல் நாட்டு விழா, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அச்சாரம் என்றே கருதுகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.