எஸ்.ஆர்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் - பாரதிராஜா

புதன், 7 ஜனவரி 2009 (17:07 IST)
விடுதலைப் புலிகளின் பணம் தமிழ் திரைத்துறையில் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார்.

ஆதாரம் எதுவும் இன்றி அவர் சொன்ன இந்த குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெ‌ரிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

நேற்று இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

இந்த‌ச் சந்திப்புக்குப்பின் பத்திரி‌க்கையாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிராஜா, இலங்கை தமிழர்களுக்கு திரைத்துறையினர் மட்டும் ஆதரவளித்தால் போதாது, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் ஒன்றுபட வேண்டும் என்று தெ‌ரிவித்தார். எஸ்.ஆர்.பி.யின் குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு,

“விடுதலைப் புலிகளுடன் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை மத்திய உளவுத்துறை கண்காணித்து வரும் நிலையில் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு விடுதலைப் புலிகள் நிதி கொடுக்கிறார்கள் என்ற எஸ.ஆர்.பி.யின் குற்றச்சாட்டு மத்திய அரசை களங்கப்படுத்துவதுபோல் உள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார் பாரதிராஜா.

வெப்துனியாவைப் படிக்கவும்