திருமங்கலத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: பா.ம.க. அறிவிப்பு
வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:49 IST)
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பா.ம.க. ஆதரவு அளிக்கவில்லை என்றும், அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் தொகுதிக்கு யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அறிந்து பாமக-வினர் வாக்களித்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருமங்கலத்தில் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பா.ம.க. ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவு செய்ய பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இதில் மத்திய அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பொதுவாக தேர்தல் அமைதியாக நடத்தப்பட வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்தித்து சுயமாக வாக்களிக்க வேண்டும். இடைத்தேர்தல் மிகவும் சுமுகமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அண்மை காலமாக நடைபெறும் இடைத்தேர்தல் களத்தில் ஜனநாயக மரபுகள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே, இடைத்தேர்தல்களே தேவையில்லை. பொதுத் தேர்தலில் எந்த கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிக்கே வாய்ப்பு அளித்து மற்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டும். அதன் மூலம் செலவு, நேரம் மிச்சமாவதுடன் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்.
நடுநிலையாளர்களும், முன்னாள் நீதிபதிகளும், சட்டவல்லுனர்களும் இந்த கருத்துக்கு வலுசேர்த்துள்ளனர். திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்து வரும் நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டு வரும் புகார்களும் ராமதாசின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.
அரசியல் கட்சிகள் மூர்க்கத்தனமாக மோதிக் கொள்ளும் இடைத்தேர்தல்கள் தேவையில்லை. எனவே திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரையும் பா.ம.க நேரடியாக ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்கிறது.
எனினும், தொகுதி வாக்காளர்கள் மீது தேர்தல் திணிக்கப்பட்டிருப்பதால் அத்தொகுதியைச் சேர்ந்த பா.ம.க.வினர், தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடக்கூடிய வேட்பாளரை முடிவு செய்து விருப்பப்படி வாக்களிக்கலாம் என பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றின் போது தமிழகத்தில் தி.மு.க தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.
இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன. பா.ம.க.வுடன் தோழமையை முறித்துக் கொண்டதாக தி.மு.க தானாக முடிவெடுத்து அறிவித்துள்ளது.
தி.மு.க.வின் இந்த முடிவால் அந்த கூட்டணியில் பா.ம.க இப்போது இல்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மாநிலத்தில் செயல்படும் பா.ம.க மத்தியில் காங்கிரஸ் தலைமை தாங்குகிற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறது.
காங்கிரஸ் கட்சி மாநிலத்திலும் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற கருத்தை பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் விரும்புகிறது.
புதிய மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் மாநிலத்தில் கட்சிகளின் அணி சேர்க்கை, கூட்டணிகள் எப்படி அமையும் என்பது பற்றி தற்போது தெளிவற்ற நிலை நிலவுகிறது.
பா.ம.க.வின் வளர்ச்சி கட்சியின் நலன் ஆகியவற்றை உத்தேசித்து வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பொதுக்குழு கூடி விவாதித்து முடிவெடுக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.