2008 ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் திங்கள் வரை உயிர் இழப்பு ஏற்படுத்திய 10,688 சாலை விபத்துக்களில் 10,958 உயிர்களை தமிழகம் இழந்துள்ளது தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் 7 வரை சாலை பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடித்தல்
2009, ஜனவரி 1 முதல் 7 வரை சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா தேசிய அளவில் ஜனவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கடந்த ஆண்டுகளைப் போல மத்திய அரசு அறிவித்துள்ளபடி 20-வது சாலை பாதுகாப்பு வாரம் 2009 ஜனவரி 1 முதல் 7 வரை கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பு சுமார் ஒரு இலட்சம் என்பது மிகவும் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. தமிழகத்தில் வாகனப் பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. 01.11.2008 நிலவரப்படி தமிழகத்தில் 7,56,503 போக்குவரத்து வாகனங்களும் 98,99,761 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் ஆக மொத்தம் 1,06,56,264 வாகனங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் உள்ள வாகனங்களில் சுமார் 87 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அபரிதமான வாகன பெருக்கத்தினாலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவினாலும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் 2008 ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் திங்கள் வரை உயிர் இழப்பு ஏற்படுத்திய 10,688 சாலை விபத்துக்களில் 10,958 உயிர்களை தமிழகம் இழந்துள்ளது, இதில் சென்னை பெருநகரில் மட்டும் உயிர் இழப்பு ஏற்படுத்திய 816 சாலை விபத்துக்களில் 904 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சாலை விபத்துக்களை தவிர்க்கவும் அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
சாலை பாதுகாப்பு கொள்கையினை 2007ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு, தமிழக அரசின் சாலை பாதுகாப்பு கொள்கை குறித்த முயற்சியினை கருத்தில் கொண்டு இதே போன்ற கொள்கையினை பிற மாநிலங்களும் தமிழ்நாடு அரசினை முன்னோடியாக கொண்டு அமுலாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. இதே போன்று, தமிழக அரசின் சாலை பாதுகாப்பு கொள்கையினை முன் மாதிரியாக கொண்டு மத்திய அரசு தேசிய சாலை பாதுகாப்பு கொள்கையினை அறிவிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2008ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 9186 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ரத்து செய்யப்பட்டுள்ளது.
5,211 ஓட்டுநர் உரிமம் ரத்து
இதேபோல் சாலை விபத்துக்களுக்குள்ளான வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களில் 5,211 ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை இன்றி இது போன்று விபத்துக்குள்ளாகும் கனரக வாகனங்களின் அனுமதி சீட்டும் தற்காலிகமாகவோ (அ) நிரந்தரமாகவோ ரத்து செய்யப்பட்டு வருகின்றது.
2008ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மாநிலம் முழுவதும் இதுபோன்று 314 வாகனங்களின் அனுமதி சீட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் மீதும் வாகன அனுமதி சீட்டு மீதும் கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுவதால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
12,902 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது
விபத்துக்களில் காயம் அடையும் நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மாநிலத்தில் 100 அவசர சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டு நல்லவிதமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2008 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் நவம்பர் வரை இம்மையங்கள் மூலமாக விபத்துக்குள்ளான 12,902 நபர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஆகியோருக்கு நடப்பாண்டு சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.55 இலட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, சுகாதாரத்துறை, செய்தி விளம்பரத்துறை, கல்வித்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி உருவாக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் வாரத்தில் நாடு முழுவதும் “சாலை பாதுகாப்பு வார விழா” சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மூலமாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துக்கள் ஆய்வு செய்தல் விபத்து நடந்த இடங்களை ஆராய்ந்து உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துகள் நடைபெறா வண்ணம் தடுக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளஅரசு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழு, விபத்து நடைபெறும் இடங்களை பல்வேறு கோணங்களில் கூர்ந்து ஆய்வு செய்து அதன் மூலம் விபத்துக்களின் காரண காரியங்களை தீர ஆராய்ந்து அதற்கான காரணத்தை கண்டறிந்து மிகச்சரியான பரிந்துரைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி மேற்கண்ட ஆய்வுகள் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலை சந்திப்புகளில் விபத்து நடைபெறாவண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல். 1,283 கிராமப்புற, நகராட்சி சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் சந்திப்புகளை கண்டறிந்து அவற்றிற்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின் விளக்கு வசதிகள் அமைக்க ரூ.12.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஓட்டுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி பெரும்பாலான விபத்துகள் ஓட்டுநர்களின் தவறுகளால் நடை பெற்றுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே கனரக வாகன ஓட்டுநர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க அரசு ஆணையிட்டுள்ளது. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும், மேற்குறிப்பு செய்யும் போது மேற்கூறிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி சான்றினை கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1.10.2008 முதல் அமுலுக்கு வந்துள்ளது.
ஓட்டுனர்களுக்கு இலவச கண் கண்ணாடி
20-வது சாலை பாதுகாப்பு வார விழாவில் பின்வரும் செயல்கள் கடைப்பிடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
• வாகன ஓட்டுநர்களுக்கும், சாலை உபயோகிப்பவர்களுக்கும் சாலை பாதுகாப்பு சம்பந்தப்பட்டவைகளை கற்றுணர செய்வதற்காக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல்.
• மருத்துவ சோதனைகள், கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கண் கண்ணாடிகளை ஓட்டுநர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தல்.
• விபத்து பகுதிகளில் அறிவிப்பு பலகைகள், போக்குவரத்து சிக்னல் பலகைகளை நிறுவவும், பராமரிக்கவும், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், இதர முக்கிய சாலைகளில் தகுந்த சாலை குறியீடுகள் ஏற்படுத்துதல்.
• அதிக சுமை ஏற்றும் வாகனங்கள் மற்றும் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துதல், தகுதி சான்றிதழ் இல்லாமல் ஓடும் வாகனங்கள் ஆகியவற்றை கண்டறிதல், அபாயகரமான பொருள்களை ஏற்றும் வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவற்றை சிறப்பு சோதனை மேற்கொள்ளுதல்.
• பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாலை பாதுகாப்பு நெறிமுறைகளை கற்பிக்க சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளுதல்.
• புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் போக்குவரத்து கழகங்களிலும், தனியார் துறையிலும் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு நடத்துதல்.
• சாலை போக்குவரத்து பயிற்சி பூங்காங்களில் குழந்தைகளுக்கு போக்குவரத்து பயிற்சி ஏற்படுத்துதல். சாலைப் பாதுகாப்பு நிறுவன வாகனங்களில் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்தல்.
• செயல்முறை போக்குவரத்து கல்வி முகாம்களை சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் மற்றும் இதர பிரிவினர்க்கும் மற்றும் ஆளில்லாத இருப்புப் பாதை குறுக்கு வழித்தடங்களில் நடந்து செல்வோர் ஆகியவர்களுக்கு நடத்துதல்.
• கல்வி நிலைய வாகனங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் பின்பற்ற உறுதி செய்தல்.
• இரு சக்கர வாகனங்கள் செல்வோர் தலை கவசம் அணியவும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு பட்டை அணியவும் வலியுறுத்தல்.
இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.