நாளை இயக்குனர் சங்க‌த் தேர்தல்

சனி, 13 டிசம்பர் 2008 (11:01 IST)
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க‌த் தேர்தல் சென்னையில் நாளை நடக்கிறது. தலைவர் பதவிக்கு போ‌ட்டி‌யிடு‌ம் பாரதிராஜாவை எதிர்த்து, 2 இய‌க்குன‌ர்க‌ள் போட்டியிடுகிறார்கள்.

இயக்குனர்கள் சங்கத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது தகராறு ஏ‌ற்ப‌ட்டதா‌ல் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. போட்டியின்றி பாரதிராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக இயக்குனர்கள் சிலர் அறிவித்தனர்.

இதை எதிர்த்து செ‌ன்னை பெருநகர நீதிமன்றத்தில் இயக்குனர் ஆர்.சி.சக்தி வழக்கு தொட‌ர்‌ந்தா‌ர். வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், பாரதிராஜாவை தலைவராக தேர்வு செய்த உத்தரவை ரத்து செய்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை அண்ணாசாலையிலுள்ள பிலிம்சேம்பர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு‌ப்பதிவு நடைபெறுகிறது.

தலைவர் பதவிக்கு பாரதிராஜா, ஆர்.சி.சக்தி, ஜாக்கிரா‌ஜ் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு புகழேந்தி தங்கராஜ், ஆர்.கே. செல்வமணி போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு விக்ரமனை எதிர்த்து ஜீவா, ரவி, பொருளாளர் பதவிக்கு வி.சேகரை எதிர்த்து முத்துவும் போட்டியிடுகின்றனர். மொத்தம் உள்ள 21 பதவிகளில் பலவற்றில் போட்டியிட 18 உதவி இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து நாளைய இயக்குனர்கள் அணி என்ற அணியை தொடங்கியுள்ளனர். இதனால் இயக்குனர்கள் - உதவி இயக்குனர்கள் இடையே இத்தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 12 செயற்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் முடிந்ததும் மாலை 6 மணி முதல் வா‌க்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தல் அதிகாரியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்பார்வையாளர்களாக வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா ஆ‌கியோரை ீ‌திமன்றம் நியமித்துள்ளது. தேர்தலின் போது பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்