கூடுத‌ல் ‌நிவாரண‌ம்: நல்லகண்ணு வ‌லியுறு‌த்த‌ல்

புதன், 3 டிசம்பர் 2008 (10:50 IST)
வெ‌ள்ள சேத விபரம் குறித்து சரியாக கணக்கெடுத்து பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கவேண்டும் எ‌ன்று‌ம் மழையா‌ல் சேத‌ம் அடை‌ந்த ‌வீடுகளு‌க்கு த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள ‌நிவாரண‌ம் போதாது எ‌ன்று‌ம் கூடுதல் நிவாரணம் வழ‌ங்க வேண்டும் எ‌ன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்ன‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். நெல் உட்பட ஏராளமான பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

இது போன்ற பாதிப்புகளை தடுத்திடும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும். சேத விபரம் குறித்து மிக சரியாக கணக்கெடுத்து பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கவேண்டும். இந்த பகுதியில் தண்ணீர் வடிவதற்குள் மத்திய குழு பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.2,000 போதாது. கூடுதல் நிவாரணம் வேண்டும். இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி செய்து தரவேண்டும்.

டெல்டா பகுதி ஆண்டு தோறும் வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்காக நாகப்பட்டினத்தில் ஜனவரி மாதத்தில் மாநாடு நடத்தப்பட உள்ளது. டெல்டா மாவட்டங்களை தேசிய இயற்கை இடர்பாடுகள் நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எ‌ன்றா‌ர் நல்லகண்ணு.