இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க செல்லும் அனைத்துக்கட்சி குழுவில் ம.தி.மு.க. பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் வருகிற 4ஆம் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்றும் குற்றம்சாற்றினார்.
ஏற்கனவே ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே நான் அனைத்துக்கட்சியினருடன் டெல்லி செல்ல மாட்டேன். எங்கள் கட்சி பிரதிநிதிகளும் செல்ல மாட்டார்கள் என்று வைகோ தெரிவித்தார்.
இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்கு தமிழகத்தில் அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறிய வைகோ, இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஆதரவு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண ஊன்றுகோலாக அமையும் என்றார்.