பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஈழத் தமிழர் பிரச்சினை திசை திருப்பப்பட்டுவிட்டது என்றும், அனைத்துக் கட்சித் தீர்மானங்கள் கிடப்பிலே போடப்பட்டுவிட்டன என்றும், நிதி திரட்டல் என்பது மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாகாது என்றும், உடனடியாக அங்கே போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு பிரச்சினைகள் கிடப்பிலே போடப்பட்டு விடவில்லை என்பதற்கான அடையாளங்கள்தான், என்றைக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோ, அன்றைக்கே அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதும் - அதன் தொடர்ச்சியாக இலங்கைத் தூதுவரை அழைத்து மத்திய அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதும் - பிரதமர் இலங்கை அதிபருடன் தொலைபேசியில் பேசியதும் - மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தமிழகத்திற்கு அனுப்பி என்னுடன் பேசச் செய்ததும் - அனைத்துக் கட்சிகளின் சார்பில் இதுவரை நடைபெறாத அளவிற்கு சென்னை மாநகரத்தில் கொட்டும் மழையில் மிகப் பெரிய மனிதச்சங்கிலி நடைபெற்றதும் ஆகும்.
அந்த மனிதச் சங்கிலியில் பெய்கின்ற மழையிலே நனைந்தவாறு டாக்டர் ராமதாசும் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட நிகழ்வுமாகும். அது மாத்திரமல்ல - ராமேஸ்வரத் துக்கு நம்முடைய திரைப்படக் கலைஞர்கள் அணி திரண்டு சென்று அங்கே நடத்திக் காட்டிய பேரணியும் பொதுக் கூட்டமும் ஆகும்.
அது மாத்திரமல்ல நேற்றையதினம் கலையுலகின் அத்தனை நடிகர்களும் ஒன்று திரண்டு சென்னையிலே ஒரு நாள் முழுதும் உண்ணா நோன்பு இருந்ததும் - அந்த நிகழ்ச்சியிலே மட்டும் 45 லட்ச ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டதும் இலங்கைத் தமிழர்களுக்கான நடவடிக்கைகள் கிடப்பிலே போடப்பட்டு விட்டன என்பதற்கான சம்பவங்களா? இல்லவே இல்லை.
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இலங்கையில் இரண்டு வாரக் காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன் வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதும் ஒன்று! அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதே, மத்திய அரசில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவி விலகுவது பற்றிய தீர்மானத்திற்கு தங்களால் உடனடியாக சம்மதம் தெரிவிக்க இயலாது, டெல்லியிலே உள்ள தங்கள் தலைமையிடம் கேட்டுக் கொண்டு தான் சொல்லவேண்டுமென்று கூறிவிட்டார்கள். அது போலவே மார்க்சிஸ்ட் கம்ஞ்னிஸ்ட் கட்சி சார்பிலே வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாத நிலையிலே இருந்தார்கள்.
ஏன், தற்போது பேட்டி கொடுத்துள்ள அய்யா ராமதாஸ் அவர்களின் "தமிழ் ஓசை'' ஏட்டிலே தீர்மானத்தை வெளியிடும்போது கூட - தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக மிகவும் எச்சரிக்கையாக மக்களவை உறுப்பினர்கள் என்று தான் வெளியிடப்பட்டது. ஆனால் உண்மையில் அந்தத் தீர்மானம் ஏடுகளிலே வெளிவந்த பிறகு தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மட்டுமே பதவி விலகல் கடிதத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்களே தவிர, வேறு யாரும் என்னிடமும் தரவில்லை - அவர்களின் கட்சித் தலைமையிடமும் தரவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே அந்தக் கருத்துக்கு மாறாக இருந்த நேரத்தில் - நாமே தீர்மானம் தோல்வி அடைந்து விட்டது, திசை திருப்பப்பட்டு விட்டது என்று சொல்லிக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
நிதி திரட்டல் பற்றியும் டாக்டர் ராமதாஸ் குறைபட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் எந்த உதவியும் கிடைக்காமல் பசியாலும் பட்டினியாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் - உணவு இல்லாமல், உடை இல்லாமல் - ஏன் குந்தக் கூட குடிசை இல்லாமல் இருப்பவர்களுக்கு நம்மாலான இந்த உதவியையாவது செய்யாமல் இருக்கலாமா என்ற எண்ணத்தோடு தான் அதுவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேதான் நிவாரண உதவிகளைச் செய்யும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் அதற்கும் குறை கண்டால் என்ன தான் செய்வது? அந்தப் பணியிலே ஈடுபடாவிட்டால் அதைக் கூடச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள்.
மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் நேரில் வந்தபோது இந்திய அரசின் சார்பில் 800 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசும் அவ்வாறே சேகரித்து அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் நேரடியாக உதவி செய்யத்தான் போகிறோம். அதையும் எவ்வாறு வழங்குவது என்பதைப் பற்றி மத்திய அரசுடன் நமது தலைமைச் செயலாளர் பேசியிருக்கிறார். உணவுத் துறை சார்பில் எந்த அளவிற்கு அரிசி வழங்க இயலுமென்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் நிதி வசூல் நடைபெற்று வருகின்றது.
திரைப்படக் கலைஞர்களும் நேற்று ஒரு நாள் உண்ணா நோன்பு நிகழ்ச்சியிலே பெரிய நடிகர்கள் முதல் அனைவரும் 45 லட்சம் ரூபாய்க்கு மேல் அறிவித்திருக்கிறார்கள். சிலர் என்னிடமே நிதி அளித்திருக்கிறார்கள்.
மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அனைத்து அலுவலர்கள் 85,355 ரூபாய் நிதியினை என்னிடம் அளித்தார்கள். இதனை அனைவருமே வரவேற்கின்ற ஒரு நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற முழு மனதோடு ஒப்புக் கொண்ட இந்தியக் கம்ஞ்னிஸ்ட் கட்சியின் தலைவர் - இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உறுதி என்று கேள்வி கேட்கிறார்.
நமது தீர்மானத்தில் தெளிவாக செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மன்றம் போன்ற தொண்டு நிறுவனங்களின் மூலமாக அனுப்பப்படும் என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, இலங்கை அரசு மூலமாக அனுப்புவோம் என்று குறிப்பிடவில்லை. இது பற்றி யெல்லாம் தொடர்ந்து மத்திய அரசோடு நமது அரசு மணிக்கு மணி தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறது. என்னென்ன பொருட்களை அவர்களுக்கு வழங்கிட முடியுமென்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் தோல்வி என்று கூறியுள்ள டாக்டர் ராமதாஸ் அவர்கள் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உறுதி மொழிகள் என்ன? மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல்? என்றெல்லாம் நான் விளக்க வேண்டுமென்கிறார். மத்திய அரசில் எப்படி தி.மு.க. ஒரு அங்கமோ, அதைப் போலத்தான் பா.ம.க.வும் அதிலே ஒரு அங்கம். அவருடைய புதல்வரே அதிலே முக்கிய அமைச்சராகத்தான் இருக்கிறார். எனவே மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு என்னைப் போல அவருக்கும் உண்டு. மத்திய அரசிடம் என்னை விளக்கம் கேட்குமாறு டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். நான் விளக்கம் கேட்டதால் தான் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசுக்கு என்று உள்ள அதிகாரங்களின் அடிப்படையிலே தான் அவர்களும் இயங்க வேண்டியுள்ளது. இன்னொரு நாட்டுப் பிரச்சினையிலே பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் நேரடியாகத் தலையிட முடியும்.
மத்திய அரசின் நிலையையும் அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா? நாம் இந்த அளவிற்கு தீர்மானம் நிறைவேற்றியதால்தான் மத்திய அரசு அதன் சக்திக்கேற்றவாறு உதவி வருகின்றது. தீர்மானத்தில் கூறியவாறு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, மத்திய அரசும் கவிழ்ந்துவிடுமேயானால் - அப்போது நிலைமை என்னவாகும்? இலங்கை அரசை இந்த அளவிற்குக் கூடத் தட்டிக் கேட்டு தமிழர்களுக்கு உதவிட முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதா இல்லையா? அல்லது டாக்டர் ராமதாஸ் கூறுவது போல அப்படியே கிடப்பிலே போட்டு விட்டதா?
இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர், சென்னையிலே என்னைச் சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் கூறியது என்ன?
* சண்டை நிறுத்தம் தொடருவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்தினார்.
* இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கைத் தலைவருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் நாங்கள் தெரிவித்துள்ளோம்.
* இந்தியாவைப் பொறுத்த வரையில் அது ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வதில்லை. இந்தியாவிற்குரிய கடல் பகுதியில் சில ராடார் கருவிகளை அமைத்துள்ளோம். அதை இந்தியாவின் பாதுகாப்பிற்குத்தான் என்பதை மறந்து விடக்கூடாது. நாங்கள் எந்த நாட்டு இராணுவ வீரர்களுக்கும் பயிற்சி அளிப்பது இல்லை.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளிலே தி.மு.க. விற்கு எந்த அளவிற்கு அக்கறை உண்டு என்பதை இனிமேல்தான் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. இலங்கையிலே போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு தமிழனின் விருப்பம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதில்தான் கருத்து வேறுபாடுகள்.
டாக்டர் ராமதாஸ் தனது பேட்டியில், இந்திய அரசு எச்சரித்தாலே, அறிக்கை விடுத்தாலே போதுமென்று சொல்லியிருக்கிறார். அதுவும் செய்யப்படாமல் இல்லை. பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம், "இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்'' என்றே கூறியிருக் கிறாரே? வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 16-10-2008 அன்று வெளியிட்ட அறிக்கையில், "ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறாரே?
ஐ.நா. சபைக்கு தந்தி கொடுக்க வேண்டுமென்று நான் சொல்ல வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். பிரதமருக்கு தந்தி கொடுக்க வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தவனே நான்தான். ஏன், அய்யா டாக்டர் எழுதியிருப்பதைப் போல 1983ஆம் ஆண்டிலேயே ஐ.நா. மன்றத்திற்கு ஒரு கோடி கையெழுத்துக்களை இந்தியத் தமிழர்களிடமிருந்து பெற்று அதனை நேரடியாக வழக்கறிஞர் டி.பி. ராதாகிருஷ்ணன் மூலமாகவே அனுப்பி வைத்த அனுபவமே நமக்கு உண்டு.
எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் திசை திருப்பப்பட்டுவிட்டது, தோற்றுவிட்டது என்று நமக்கு நாமே ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பது என்பது சரியாகாது. இலங்கையிலே உள்ள ஒவ்வொரு தமிழனும் காப்பாற்றப்பட வேண்டுமென்பதே நமது நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிட நாம் ஒவ்வொருவரும் நமது நிலைக்கும் நினைப்பிற்கும் தக்கவாறு பாடுபட்டு வருகிறோம் என்பது தான் உண்மை.
தமிழ் மக்களிடம் பொதுவாக இந்த ஐயப்பாடுகள் எழும் என்பதற்காகவும் அந்த மக்களின் ஐயங்களைப் போக்கிட என்னிடமிருந்து விளக்கம் தரப்பட வேண்டு மென்ற நல்ல எண்ணத்தின் காரணமாகவும், டாக்டர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பதாகவே நான் கருதிக் கொண்டு - இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்த ஒற்றுமையைக் கட்டிக் காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள அனைத்துக் கட்சியினரையும், தமிழ் மக்களையும் வேண்டுகிறேன்.