ஜெயலலிதா ஆதரவாளர்கள் தான் கல்வீசினார்கள்: கூடுதல் டி.ஜி.பி!
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (05:07 IST)
தேவர் குருபூஜையின் போது ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தான் கல்வீசினார்கள் என்று கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேவர் குருபூஜையை முன்னிட்டு நேற்று (30ஆம் தேதி) ராமநாதபுரம் மாவட்டம், சும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான அளவு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலையிலிருந்து அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தி திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாலை சுமார் 3.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, ஹெலிபேடிலிருந்து தேவர் நினைவிடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தேவர் நினைவிடத்திற்குள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த பொழுது, அவருடன் வந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டம் உள்ளே நுழைய முயற்சித்த பொழுது, காவல்துறையினர் கூட்டத்தினரை தடுக்க முற்பட்டனர்.
கூட்டத்தினர் காவல்துறையினர் மீதும் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்கினர். காவல்துறையினர் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நான்கு கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் மற்றும் தடியடி நடத்தியும் கூட்டத்தை விரைவாக கலைத்து அமைதியை நிலைநாட்டினர். இந்த சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் காயம் அடைந்தனர்.
மேலும், சில காவல்துறை வாகனங்களும் மற்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் கான்வாயிலிருந்த இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி ஹெலிபேடுக்கு செல்லும்போது முழுமையான பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ``இசட் பிளஸ்'' பாதுகாப்பிற்கு உரியவர் என்பதால், அவருக்கு முறையான ``இசட் பிளஸ்'' பாதுகாப்பு மற்றும் தேவையான சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பும் செய்யப்பட்டிருந்தது'' என்று கூறியுள்ளார்.