குழந்தையைக் கடத்திக் கொன்றவர் கைது!

புதன், 29 அக்டோபர் 2008 (15:54 IST)
சென்னையில் இரண்டரை வயது ஆண் குழந்தையை பணத்திற்காகக் கடத்திக் கொலை செய்த வாலிபரை மும்பையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

செலவுக்குப் பணம் தராததால் ஆத்திரமடைந்து உறவினரின் இரண்டரை வயது ஆண் குழந்தையை தூக்கிச் சென்று ரெயில் தண்டவாளத்தில் தலையை மோதி கொடூரமாக கொலை செய்த ஜூகுனு என்ற வாலிபர், கடந்த ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்தார். தற்போது அவரை காவல்துறையினர் மும்பையில் கைது செய்துள்ளனர்.

இதுபற்றிய விவரம்:

சென்னை சௌகார்பேட்டை சேர்ந்த ஆனந்த் (வயது 34), மனைவி ஷைலா (24). இவர்களுக்கு இரண்டரை வயதில் மோனிக் என்ற ஆண் குழந்தை இருந்தது.

ஸ்டீல் பட்டறை நடத்தி வரும் ஆனந்தின் உறவினரான ஜூகுனு (வயது 35)., அதே பகுதியில் வசித்து வந்தார். அவ்வப்போது ஆனந்தின் வீட்டிற்கு வந்து செலவுக்கு பணம் வாங்கிச் செல்வதை ஜூகுனு வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

அப்படி வரும் போதெல்லாம் குழந்தை மோனிக்குடன் நன்றாக பழகினான். கடந்த 25ந் தேதி ஆனந்த் மதுரைக்கு வியாபார விஷயமாக சென்றிருந்த போதும் ஜூகுனு வந்துள்ளார். ஷைலாவிடம் பணம் கேட்டபோது, அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டாராம்.

பணம் தராத ஆத்திரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம் போல் குழந்தை மோனிக்கை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதாகக் கூறிவிட்டு அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் குழந்தையை அடித்துக் கொலை செய்து வீசி விட்டு தப்பியோடி விட்டார் ஜூகுனு.

முதலில் எர்ணாகுளத்தில் மறைந்திருந்த ஜூகுனு, பின்னர் பல இடங்களில் சுற்றிவிட்டு மும்பையில் இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் விக்டோரியா டெர்மினஸ் ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள கல்பதேவி சாலையில் திரிந்து கொண்டிருந்த ஜூகுனு-வை மும்பை காவல்துறையினரின் உதவியுடன் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மும்பையில் இருந்து ஜூகுனுவை சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்