அலைவரிசைத் தொகுப்பு ஊழல் குற்றச்சாட்டு : வைகோ கோரிக்கை!
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (11:24 IST)
தொலைத்தொடர்புத் துறையில் அலைவரிசைத் தொகுப்பு (ஸ்பெக்ட்ரம்) பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராசாவை உடனடியாக பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொகுப்புக்கு அனுமதி வழங்குவதில், ரூ.50,000 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சில புதிய தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டமிட்ட சூதாட்டமாக லாபம் சம்பாதிக்க வழிவகுக்கப்பட்டது என்றும் தேசிய தொலைதொடர்பு ஊழியர்கள் சம்மேளனம் புகார் கூறியுள்ளது.
2007ஆம் ஆண்டிலேயே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்த நெறிமுறைகளை பின்பற்றாமல், தன்னிச்சையாக, அதிலும் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கொள்ளை லாபம் பெற திட்டமிட்டே தொலைதொடர்பு அமைச்சகம் செயல்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
செல்பேசி சேவையை தொடங்காமல் ஸ்வான் டெலிகாம் நிறுவனம், 49 விழுக்காடு பங்குகளை ரூ.3,500 கோடிக்கு விற்றதாக தெரிகிறது.
வெளிப்படையான அணுகுமுறை இன்றி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட முறையால், இமாலய ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணை நியாயமாக நடக்க, தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசாவை உடனடியாக பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்று வைகோ கூறியுள்ளார்.