மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தில் 140 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 520 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.
அங்கு கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரை அகற்றக்கூடாது என்று ஒரு பிரிவினர் ஊரை காலி செய்து மலைப்பகுதியில் குடியேறினர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழக அரசு உத்தரவுப்படி சர்ச்சைக்குரிய தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது.
இதற்கிடையே, அங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் ஒரு பிரிவினர் வருகிற 10ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அப்போது தடுப்புசுவரில் வெள்ளை அடிப்பது தொடர்பாக இருபிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு கலவரமாக மாறியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உத்தப்புரம் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கலவரகாரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இது தொடர்பாக உத்தப்பாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்கள் உள்பட 140 பேரை கைது செய்தனர். இருதரப்பை சேர்ந்த 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.