மகாத்மா காந்தி பிறந்தநாளான இன்று முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதையும் மீறி யாராவது புகை பிடித்தால் உடனடியாக ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
உலகில் புகையிலை பழக்கத்தால் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். மேலும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மே 30ஆம் தேதி வெளியிட்டது.
பொது இடங்களில் புகை பிடிக்க வகை செய்யும் இந்த சட்டம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இந்திய புகையிலை நிறுவனம், இந்திய ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்த அனுமதி அளிக்க கோரியும், இந்த எல்லா மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரியும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பிறப்பித்த சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டது.
எனவே பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், மருத்துவமனைகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.