இன்னும் 18 நாட்களுக்குள் தமிழ் ஈழத்தை ஆதரித்து சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவில்லையென்றால் எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள்ளேயே உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
ஈழத் தமிழர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள அரசை கண்டித்தும், சிறிலங்க அரசுக்கு கண்டனம் தெரிவிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள சிறிலங்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாக்கிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் உரக்ககுரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் உலக அளவில் உள்ள தமிழர்களிடம் உள்ளது என்றும், சிறிலங்காவில் நடக்கும் இனப்படுகொலை போல உலகில் வேறு எங்கும் படுகொலை நடந்தது இல்லை என்று மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறி வருகின்றனர் என்றார்.
தமிழக முதலமைச்சர் இதில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இன்னும் 18 நாட்களுக்குள் தமிழ் ஈழத்தை ஆதரித்து சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழ் ஈழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம் என்றார் ராமதாஸ்.
அதன் பிறகும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றால் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் தொடர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று ராமதாஸ் கூறினார்.