சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது மத்திய, மாநில சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதார மையங்கள், கலையரங்குகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கருத்தரங்கு மற்றும் கலந்தாய்வு கூடங்கள், மருத்துவமனை வளாகம், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பொது அலுவலகங்கள், உணவு விடுதிகள், பள்ளி- கல்லூரி வளாகங்கள், நீதிமன்ற வளாகங்கள், பூங்காக்கள்.
பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், கடை வீதிகள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள், கூட்டுறவு மையங்கள், அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து மதக் கோவில்கள், பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களாகும். மேற்கண்ட இடங்களில் யாராவது புகை பிடித்தால் உடனடியாக அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றார் காவல்துறை ஆணையர் சேகர்.
நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை நேர்மையாக நடந்து வருகிறது என்றும் விசாரணை தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த காவல்துறை ஆணையர் சேகர், பொது மக்கள் தங்களது பாதுகாப்பு குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக 'மக்கள் சேவையில் சென்னை காவல்' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது என்றார்.