தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: சிறிலங்க தூதரகம் மறுப்பு!
திங்கள், 29 செப்டம்பர் 2008 (10:34 IST)
''இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்ட கால நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்திலும், சிறிலங்க கடற்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், விடுதலைப்புலிகள் போன்ற மூன்றாவது சக்தி ஒன்றின் செயற்பாடாக இது அமைவதற்கும் சாத்தியம் உள்ளது என்பதனை நிராகரிப்பதற்கில்லை'' என்று சிறிலங்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்டம்பர் 28ஆம் தேதி, கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை சிறிலங்க கடற்படை தாக்கியதாகவும் அதில் ஒருவர் இறந்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி எமது வனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த குற்றச்சாற்று சம்பந்தமான உண்மையான தகவல்களைப் பெறுவதற்காக, இந்த நிகழ்வு பற்றிய தகவல்களை உடனடியாக சிறிலங்க கடற்படை பூரண விசாரணைக்குப்பின், இந்த குற்றச்சாற்றுகளை முற்றிலுமாக மறுத்து உள்ளது.
சிறிலங்க கடற்படையினர், இந்த நிகழ்வு நிகழ்ந்த பகுதியில், தமது ரோந்துப்படகுகள் எவையும் அவ்வேளையில் நிலை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.
இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்ட கால நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்திலும், சிறிலங்க கடற்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், விடுதலைப்புலிகள் போன்ற மூன்றாவது சக்தி ஒன்றின் செயற்பாடாக இது அமைவதற்கும் சாத்தியம் உள்ளது என்பதனை நிராகரிப்பதற்கில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.