செப். 30 நள்ளிரவு முதல் லாரிகளை கர்நாடகத்துக்கு அனுப்ப வேண்டாம்: செங்கோடன்!
வியாழன், 25 செப்டம்பர் 2008 (16:46 IST)
செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு முதல் தமிழக லாரிகளை கர்நாடக மாநிலத்துக்கு அனுப்ப வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு) கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, சம்மேளனத் தலைவர் ப.செங்கோடன் விடுத்துள்ள அறிக்கை:
அக்டோபர் 1ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத வாகனங்கள் மீது உயர் நீதிமன்ற ஆணையை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தை கடந்து செல்லும் 70 ஆயிரம் வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
உதிரி பாகங்கள் விலை உயர்வு, கட்டுபடியாகாத லாரி வாடகை, வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் லாரித் தொழில் கடும் நசிவடைந்து வரும் சூழலில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது என்பது லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும். இந்த திட்டமானது நடைமுறைக்கு ஒத்துவராது.
எனவே, திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 30-ம் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழக லாரிகளை வரும் 30-ம் தேதி இரவு முதல் கர்நாடகத்துக்குள் அனுப்ப வேண்டாம்.
லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சரக்கு உரிமையாளர்கள், புக்கிங் ஏஜெண்டுகள் அனைவரும் போராட்டத்துக்கு ஒத்துழைப்புத் கொடுக்க வேண்டும்.