வன்முறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த சபதம் ஏற்போம்: ஜெயல‌லிதா!

ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (17:27 IST)
"வன்முறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த நாம் அனைவரும் சபதம் ஏற்போம்" எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். "இன்றைக்கு இந்தியா இரக்கமற்றவர்களின் வன்செயல்களாலும், கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களாலும் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருப்பதை மிகுந்த மன வேதனையோடு பார்க்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அப்பாவி மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுகின்றன.

மக்கள் கூட்டம் மிகுந்த கடை வீதிகளில் வெடி குண்டுகள் வெடிக்கின்றன. ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும், பேரு‌ந்து நிலையங்களிலும், இன்ன பிற பொது இடங்களிலும் இத்தகைய வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்படுவோர் எல்லாம் சாதாரண பொதுமக்களே. யார் என்றும் தெரியாமல், முகம் கூட அறியாமல், எந்தத்தவறும் செய்யாதவர்கள் மாண்டு போகிறார்கள். ஆணும், பெண்ணும், குழந்தைகளுமாக யார் பெற்ற பிள்ளைகளோ. இவர்கள் ஏன் இப்படி கொல்லப்படுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

இந்தக் கொடுஞ்செயல்களை செய்பவர்கள், தாங்கள் ஏதோ ஒரு கொள்கைக்காக செய்வதாக பிரகடனம் செய்கின்றனர். ஏதோ ஒரு இலக்கை அடைய இதைச் செய்வதாகவும் அறிவிக்கின்றனர். கொள்கை என்றும், இலக்கு என்றும் அவர்கள் சொல்வதெல்லாம் வெறும் கற்பனை, யாருக்கும் விளங்காத புதிர்கள்.

முடிவில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சமூக விரோத சக்திகளால் எந்தக் காரணமுமின்றி கொன்று குவிக்கப்படுவதைத்தான் காண்கிறோம். அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத பகை கொண்ட உள்ளத்தின் செயல்கள் தானே இந்தப் பயங்கரவாத செயல்கள்?

யாரையாவது அர்த்த மற்று கொன்று குவிப்பதை, எந்த மதமாவது ஏற்குமா? ஆதரிக்குமா?

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக பார்ப்பது தான் இந்து சமயத்தின் பெருமை. அத்தகைய ஒரு சமயம், மற்றவர்களுக்கு எதிராக, சக மனிதர்களுக்கும் எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ளும்

இஸ்லாம் என்றாலே அமைதி. உன்னை நீ நேசிப்பதைப் போல, உன் அயலவனையும் நேசி என்று மொழிந்தார் இயேசு கிறிஸ்து. அகிம்சை என்ற அற்புதக் கொள்கையை உலகுக்கு அளித்த மதம் ஜைன மதம். உள்ளத்தின் அமைதியே உலகின் அமைதி என்றார் புத்த பெருமான்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்த மதங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து இந்தியாவில் தழைத்து வந்திருக்கின்றன. ஒன்றுக்கு அடி பணிந்து மற்றொன்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. இன்றைக்கு ஏன் மற்ற மதத்தினர் மீது இவ்வளவு வெறுப்பு, நம்மையே நாம் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.

வழி தவறிச் செல்வோரின், கோழைகளின் தவறான ஆயுதம் தானே வன்முறை என்பது? சர்வதேச அமைதி நாளான இந்த நாளில், நம் முன்னோர்கள் உயிராய் மதித்த உயர்ந்த சமய நெறிகளுக்கு நம்மையே நாம் மீண்டும் அர்ப்பணிப்போம். வன்முறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த நாம் அனைவரும் சபதம் ஏற்போம். ஒருவரை ஒருவர் சகோதர சகோதரிகளாகப் போற்றி நேசிக்கும் பண்மைப் பெறுவோம். அனைவரும் வாழ்வுபெற அமைதிக்கு வாய்ப்பளிப்போம்" எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்