பணத்திற்காக கட்சியை அடகு வைக்க மாட்டேன் : விஜயகாந்த்!
வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:46 IST)
''ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி வளர்ந்து வரும் தே.மு.தி.க.வை பணத்திற்காக எந்த சுயநல சக்தியிடமோ, சமூக விரோதிகளிடமோ, அடகு வைக்க மாட்டேன்'' என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த சில மாதங்களாக நமது இயக்கத்திற்கு வளர்ச்சி நிதி தர வேண்டுமென்று என்னிடம் தொண்டர்கள் வற்புறுத்தி வருகின்றனர். மூடி திருத்துவோர், சுமை தூக்குவோர், உடைவெளுப்போர், உழவுத்தொழில் புரிவோர், நெசவாளர்கள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தாய்மார்கள் போன்ற பலரும் தங்களால் இயன்ற சிறிய தொகையை கட்சிக்கு நன்கொடையாக தர முன்வந்துள்ளனர்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். அதை போல தங்கள் சொந்த செலவுகளை குறைத்துக்கொண்டு சேமித்த பணத்தை வளர்ச்சி நிதியாக ஏற்கனவே தந்து கொண்டிருக்கிறீர்கள். நமது இயக்கத்தை பொறுத்தவரை யாரிடமும் நன்கொடை கேட்க கூடாது என்பதை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறேன்.
இப்போதும் அதே நிலை தொடர வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாகும். எக்காரணத்தை கொண்டும் நன்கொடை என்ற பெயரால் பொது மக்களுக்கும், குறிப்பாக வணிக பெருமக்களுக்கும் எந்த தொந்தரவையும் யாரும் ஏற்படுத்தக் கூடாது.
தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நேரம் இது. நாட்டு மக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலையும், வறுமையும் ஒழிப்போம். ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி வளர்ந்து வரும் தே.மு.தி.க.வை பணத்திற்காக எந்த சுயநல சக்தியிடமோ, சமூக விரோதிகளிடமோ அடகு வைக்க மாட்டேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.