1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்!
திங்கள், 15 செப்டம்பர் 2008 (11:01 IST)
அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாயொட்டி நியாய விலைக்கடைகளில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் கருணாநிதி, ரூபாய் 1-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுவதால் ஒரு கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைவார்கள் என்றும், ஆண்டுக்கு சுமார் 400 கோடிக்கு மேல் கூடுதல் செலவாகும் என எதிர்பார்ப்பதாகவும், அண்ணா பிறந்தநாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
அதன் படி நியாய விலைக்கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை சென்னை ராதாகிருஷ்ணன் நகர், கொருக்குப்பேட்டையில் இன்று காலை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்கின்றனர்.