ரூ.4,150 கோடி‌யி‌ல் வணிக வாகன‌ தொ‌ழி‌ற்சாலை: கருணா‌நி‌தி முன்னிலையில் ஒ‌ப்ப‌ந்த‌ம்!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (14:56 IST)
எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ரூ.4,150 கோடி முதலீட்டில் வ‌ணிக வாகன தயா‌ரி‌ப்பு‌ தொழிற்சாலைகளை அமை‌ப்பத‌ற்கான புரிந்துணர்வு ஒ‌ப்ப‌ந்‌த‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று கையெழு‌த்தான‌து.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "அசோக் லேலண்டு நிறுவனம் உலகின் அனைத்துப் பெரிய சந்தைகளிலும் இடம் பெற்றுள்ள, பயணிகளுக்கான சொகுசுக் கார், குடும்பங்களுக்கான கார், விளையாட்டுப் போட்டிகளுக்கான கார், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படும் பிற வாகனங்கள், இலகுரக வணிக வாகனங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஆண்டுக்கு 1,90,000 வாகனங்களைத் தயாரிக்கும் திறன்கொண்ட இலகுரக வணிக வாகனத் திட்டத்தை மூன்று கூட்டு முயற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் உற்பத்தித் திறனுடன் நடுத்தர ரக மற்றும் கனரக வணிக வாகனங்கள்
திட்டத்தைத் தன் சொந்தத் திட்டமாகச் செயல்படுத்தவும் அசோக் லேலண்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அசோக் லேலண்டு நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ள இந்த 2 திட்டங்களும் ஒருங்கிணைந்த மோட்டார் வாகனத் திட்டத்திற்கான அனைத்து உட்கூறுகளையும் கொண்டிருக்கும்.

எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ரூ.4,150 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் இத்திட்டங்கள் முழு திறனுடனும் செயல்படும்பொழுது 4,500 பேருக்கு நேரடியாகவும், ஏறத்தாழ 13,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவா‌ய்‌ப்புகளை வழங்கும்.

முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் இன்று (8.9.2008) நடைபெற்ற இத்தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, அசோக் லேலண்டு நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆ‌‌கியோரு‌ம் கையெழுத்திட்டனர்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்