விஜயன் கொலை வழக்கில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் கைது!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (10:14 IST)
எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் உள்பட கூலிப்படையினர் 7 பேரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் என்ற விஜயகுமார், கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக அவரது நண்பர் செந்தில் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே விஜயனின் மனைவி சுதா, சொத்து பிரச்சினை காரணமாக தனது குடும்பத்தினரே கூலிப்படையினரை ஏவி தனது கணவனை தீர்த்துக்கட்டியதாக புகார் கூறினார்.
இந்த வழக்கில் துப்பு கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் தலைமை இயக்குனர் (டி.ஜி.பி.) அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின்பேரில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஷாஜகான் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 3 மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விஜயனின் மனைவி சுதாவின் சகோதரிகள் லதா, அவரது கணவர் ராஜேந்திரன், மகன் குமார் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. சுதாவின் சகோதரிகள் கீதா, பானுமதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 60 பேரை காவல்துறையினர் துருவித்துருவி விசாரித்தார்கள்.
இந்த விசாரணையில் கொலையாளிகள் யாரென்று துப்பு துலங்கியது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கொலை செய்யப்பட்ட விஜயனின் மனைவியின் தங்கையான பானு என்ற பானுமதி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சொத்து தகராறு காரணமாக கூலிப்படையை ஏவி இந்த கொலை நடந்துள்ளது. கூலிப்படையைச் சேர்ந்த 6 பேரும் பிடிபட்டுள்ளனர். கூலிப்படையை ஏவிய முக்கிய புள்ளி ஒருவரும் கைது செய்யப்படுவார். முழுவிவரமும் திங்கட்கிழமை (இன்று) வெளியிடப்படும் என்று கூறினார்.