சென்னையில் 6,000 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (15:29 IST)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுச் சென்னையில் பொது இடங்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்த 6,000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்க இன்று கடைசி நாள் என்பதால் சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செலப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டன.
தென் சென்னையில் வேளச்சேரி, விஜயநகர், கே.கே.நகர் பிள்ளையார் கோயில், திருவல்லிக்கேணி பெரிய தெரு, சைதாப்பேட்டை மறைமலை அடிகள் சாலை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சாலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப் பட்டினம்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.
எழும்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, புளியந்தோப்பு, ஐ.சி.எஃப், பெரம்பூர், அயனாவரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டன.
இதுதவிர திருவல்லிக்கேணி, நாகப்பையர் தெரு, திருவெட்டீஸ்வரன் பேட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இரண்டு இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் தலைமையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலங்களை முன்னிட்டுக் கடற்கரையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.