புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக பொருட்கள் கிடைப்பது குறித்தும் குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புதிய குடும்ப அட்டைகள் பெறுதல், மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின், சென்னை 14 மண்டல பகுதி மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு வரும் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
அப்பகுதியை சுற்றி வாழும் பொது மக்கள் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக பொருட்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.
குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், சென்னையில் உள்ள 14 மண்டல பகுதி வாழ் பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொளளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.