தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி சிறிலங்க கடற்படை தாக்குதல்!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (10:32 IST)
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி சிறிலங்க கடற்படையினர் கடுமையாக தாக்கி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 533 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள், தனுஷ்கோடி 3ஆம் தீடை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தன.
பின்னர் படகில் இருந்த மீனவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். அவர்களின் வலைகளையும் அறுத்து எறிந்தனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அள்ளிச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் சோகத்துடன் ராமேசுவரம் திரும்பினர்.
சிறிலங்க கடற்படையினரால் பலத்த காயம் அடைந்த மீனவர் ஜோசப் கூறுகையில், தனுஷ்கோடி அருகே 3ஆம் தீடை பகுதியில் நாங்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர் எங்களை கடுமையாக தாக்கி, வலைகளை அறுத்து எறிந்தனர்.
எங்களை ஜட்டியுடன் நிற்க வைத்து உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எங்கள் துணிகளையும் கடலில் தூக்கி வீசி விட்டு சென்றனர். இந்த பகுதியில் இனிமேல் மீன்பிடிக்க வந்தால் கொன்று விடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். உயிர் பிழைத்தால் போதும் என நாங்கள் ராமேசுவரத்திற்கு திரும்பி விட்டோம் என்று ஜோசப் கண்ணீர் மல்க கூறினார்.