தியாகராயநகர் உஸ்மான் சாலை மேம்பாலப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உஸ்மான் சாலை - வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பில் மேம்பாம் திறக்கப்பட்டது. அதன்பின், பொதுமக்கள் நலன் கருதி கடந்த 17ஆம் முதல் அமல்படுத்தப்பட்ட போக்குவரத்தில், கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டு 25ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள், முன்பிருந்த தடை நீக்கப்பட்டு இனி நேராக செல்லலாம்.
மேட்லி சுரங்க பாதையில் இருந்து மேட்லி சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள் முன்பிருந்த தடை நீக்கப்பட்டு மேட்லி சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி உஸ்மான் சாலைக்கும், வலது புறம் திரும்பி தெற்கு உஸ்மான் சாலைக்கும் மற்றும் நேராக பர்கிட் சாலைக்கும் செல்லலாம். பர்கிட் சாலையில் ஏற்கனவே உள்ள ஒருவழி பாதை தொடரும்.
மேட்லி சந்திப்பில் இருந்து பர்கிட் சாலை, வெங்கட் நாராயணா சாலை சந்திப்பை நோக்கி செல்லலாம். பர்கிட் சாலை, வெங்கட் நாராயணா சாலை சந்திப்பில் இருந்து மேட்லி சந்திப்பை நோக்கி செல்ல கூடாது.
வெங்கட் நாராயணா சாலையில் ஏற்கனவே உள்ள ஒருவழி நீக்கப்பட்டு இருவழி பாதையாக்கப்படுகிறது. அதாவது அண்ணா சாலையில் இருந்து பர்கிட் சாலை, வெங்கட் நாராயணா சாலை சந்திப்பை நோக்கி வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும். முத்துரங்கன் சாலை வழியாக செல்லும் பேருந்துகள், இனி உஸ்மான் சாலை வழியாக செல்லும்.
இந்த சந்திப்பில் மேற்சொன்ன போக்குவரத்து மாற்றங்கள் தவிர, பிற மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. அச்சந்திப்பில் நடைமுறையில் உள்ள பிற போக்குவரத்துகளில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.