சந்தர்ப்பவாத அரசியலுக்கு அரசு பணியாது: கே.வி.தங்கபாலு!
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (15:36 IST)
மதவாத சக்தி, அதற்கு துணைபோகும் இடதுசாரி கட்சிகள் நடத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மத்திய, மாநில அரசுகள் பணியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசுக்கு எதிரான இடதுசாரிகளின் அறிவிப்பை ஏற்காமல் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பேருந்து, ரயில் உட்பட அனைத்து வாகனங்களும் நேற்று வழக்கம்போல் இயங்கின. மக்களின் இயல்வு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
மதவாத சக்தி, அதற்கு துணைபோகும் இடதுசாரி கட்சிகள் நடத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மத்திய, மாநில அரசுகள் பணியாது. மக்களின் அன்றாட தேவையை, உரிமையை புறக்கணிக்காமல் வெற்றிகமாக நிறைவேற்றிட அரசுகள் பாதுகாப்பாக இருக்கும்.
அன்னிய சக்திகளுக்கு ஆதரவாகவும், இந்திய வளர்ச்சிக்கு எதிராகவும் இடதுசாரிக் கட்சிகளின் இன்றைய செயல்பாடுகள் இப்போராட்டத்தின் தோல்வி மூலம் மக்கள் மத்தியில் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்திய அரசு, தொழிலாளர் வர்க்கத்திற்கு சிறப்புத் திட்டங்கள் வகுத்து அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சமூக சிந்தனையோடு கடந்த 50 ஆண்டு காலம் செயல்படுத்தி வரும் சாதனைகளை எண்ணிப் பார்த்து தொழிலாளர்கள் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடதுசாரிக் கட்சிகளின் போர்வையில் சமூக விரோத சக்திகள் அராஜகத்தில் ஈடுபட்டு மக்களுக்கு இடையூறு விளைவித்திருக்கிறார்கள். இதுபோன்ற மக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல" என்று கூறியுள்ளார்.