ரெட்டணை சம்பவம்: விசாரணைக்கு உத்தரவு!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (15:55 IST)
திண்டிவனம் அருகே கிராம மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ரெட்டணை கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து, திண்டிவனம் மாஜிஸ்டிரேட் மற்றும் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவனுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 50,000 நிவாரணத் தொகை வழங்கும்படி, முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ரெட்டணை கிராம மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தை அடுத்த ரெட்டணை கிராமத்தில் தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. அப்போது தினக்கூலி குறைத்து வழங்கப்பட்டதைக் கண்டித்து, சனிக்கிழமை கிராம மக்கள் சாலைமறியல் செய்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை பரவியதை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். இதில் சிறுவன் ஒருவன் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது நினைவு கூறத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்