வீட்டுவரி, தொழில் வரி ஆகியவற்றை உயர்த்தி, குமாரபாளையம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதைக் கண்டித்து வரும் 20ஆம் அ.இ.அ.தி.மு.க சார்பில் உண்ணா விரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நகர மன்றக்கூட்டத்தில், 20 விழுக்காடு வீட்டு வரியையும், 50 விழுக்காடு தொழில் வரியையும், 75 விழுக்காடு வணிக வரியையும் உயர்த்துவது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டன.
இதன் விளைவாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழில்புரிவோர், வியாபாரம் செய்வோர் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரிகளை உயர்த்துவதில் ஆர்வம் காட்டும் தி.மு.க அரசு, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் ஏதாவது ஆர்வம் காட்டியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்கின்ற விடை தான் வருகிறது.
ஏன் என்றால், அந்த அளவுக்கு மின்சார வெட்டு அப்பகுதியில் நிலவுகிறது. மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை வைத்தே அந்தப் பகுதி வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பதை கணித்துவிடலாம். விசைத்தறி அதிக அளவு உள்ள குமாரபாளையம் நகராட்சியில் ஏற்பட்டுள்ள கடும் மின்வெட்டு காரணமாக விசைத்தறித் தொழிலே முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் சுயநலப் போக்கைக் கண்டித்தும், வீட்டு வரி, தொழில் வரி மற்றும் வணிக வரி ஆகியவற்றை உயர்த்தி உள்ள குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட வரிகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மின்சார வெட்டை உடனடியாகப் போக்க வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் ஆகஸ்ட் 20ஆம் தேதி குமாரபாளையம் நகரம், பள்ளிப்பாளையம் பிரிவு ரோடு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.