2,500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மான்யம்: மு.க. ஸ்டாலின் நாளை வழங்குகிறார்!
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (13:04 IST)
2,500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மான்யமாக ரூ.2,,50,000,00-ஐ உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொடர் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடியாக சுழல்நிதி மான்யத்தை வழங்கி வருகிறார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மான்யம் வழங்குகின்ற இந்த தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக நாளை மாலை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் 2,500 மகளிர் குழுக்களுக்கு ரூ.2,,50,000,00 மான்யமும், ரூ.24.86 கோடி வங்கிக் கடனும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த 2,500 குழுக்களுக்கும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்க உள்ளார்.
மேலும் இவ்விழாவில் அதிக அளவில் வங்கிக் கடன் வழங்கிய ஐந்து வங்கி மேலாளர்களையும் அவர் கௌரவிக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.