சுதந்திரம் பாதுகாக்கப்பட அனைவரும் ஒன்று பட வேண்டும்: கருணாநிதி!
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (14:59 IST)
சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி தமது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், "நமது நாட்டின் சுதந்திரத் தினவிழா மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
ஏறத்தாழ 200 ஆண்டு காலம் இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நிய ஆதிக்கத்தைக் தகர்த்து நமது நாடு விடுதலை பெற்ற திருநாள் 1947 ஆகஸ்டு 15. நாம் பெற்ற சுதந்திரத்தால் அடைந்துள்ள பயன்கள் பலப்பல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமையுடன் இந்தியத் திருநாடு திகழ்கிறது.
பெற்ற சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்த சுதந்திரத் திருநாள். இந்த உணர்வோடு, தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்" என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.