அமைச்சர் ராஜா எங்களை கடத்தினார்: உயர் நீதிமன்றத்தில் தம்பதி வாக்குமூலம்!
செவ்வாய், 29 ஜூலை 2008 (17:24 IST)
தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.சாமி தங்களை கடத்தினார் என்று தம்பதி இரண்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள நிலம் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி ஆகியோரை கடத்தி உள்ளனர்.
அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அவர்களது உறவினர்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், நிலங்களை கொடுக்காவிட்டால் உறவினர்கள், குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்றும், 1.5 கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்பனை செய்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் நேரிடையாகவே தொலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, நிலத்தை கொடுக்கா விட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் முருகேசன், பழனிவேல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போன பழனிச்சாமி, மலர்விழி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்கள், எங்கள் இருவரையும் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் கடத்தி சென்றனர் என்றும், நாங்கள் சென்னையிலேயே தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், மிக முக்கியமான இந்த பிரச்சைனயில் கணவன்-மனைவி இருக்கும் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பெருந்துறை காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பதில் அளிக்கும் படி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.