கோயில்களில் வெடிகுண்டு சோதனை!
செவ்வாய், 29 ஜூலை 2008 (13:33 IST)
பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து தென் தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள கோயில்களை குண்டு வைத்து தகர்த்து விடுவதாக தீவிரவாதிகளிடம் மிரட்டல் வந்ததை தொடர்ந்து கோயில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், காவல்துறையினர் எப்போதும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயில், பழனிமலையில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோயில், திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில், ஸ்ரீ வில்லிப்புதூரில் உள்ள ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கோயில், கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் திருக்கோயில் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் வெடிகுண்டு சோதனையும் காவல்துறையினர் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ள 5 கோபுரங்களில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னே பொதுமக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.