முண்டாசு கட்டினால் நண்பனாகி விட முடியாது: விஜயகாந்த் மீது கருணாநிதி தாக்கு!
திங்கள், 28 ஜூலை 2008 (16:45 IST)
''விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.
விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி' என்று 'தினமணி' ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே? என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும், 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகள் கடனை ரத்து செய்ததும், யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (ப) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்! என்று பதில் அளித்துள்ளார் கருணாநிதி.
மற்றொரு கேள்வியில், காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயிகளை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி இருக்கிறாரே? என்று கூறியுள்ள அவர், உச்ச நீதிமன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும், அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபரமறிந்தவர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டுதானிருக்கிறார்கள் என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
"ஒகேனக்கல்'' கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் உளறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது என்றும் இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட இருக்கிறது என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
மேலும் அவர் பதில் அளிக்கையில், விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது. காவிரி பிரச்சினை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, 'டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது' என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந் தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.