''இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் செய்யூரிலும், மரக்காணத்திலும் மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்ய வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி டெல்லி பயணத்தின்போது, மத்திய அரசோடு பேசியதில் 32,000 கோடி ரூபாய் செலவில் 2 மிகப் பெரிய மின் திட்டங்கள் தமிழகத்திற்கு கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். அந்த மின் நிலையம் அமையும் இடம் செய்யூரா, மரக்காணமா அல்லது கடலூரா என்பதை முடிவு செய்ய டெல்லியில் இருந்து குழு வரப்போகிறது என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ மரக்காணம் அல்லது கடலூர் ஆகிய 2 இடங்களை தேர்வு செய்வது குறித்து ஆய்ந்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார். தேசிய அனல் மின் கழகத்தின் திட்டத்தை செய்யூரில் அமைய விடக்கூடாது என்பதில் அவர், ஆரம்பம் முதல் குறியாக இருந்து வருகிறார். அது ஏன் என்று புரியவில்லை என்று ராமதாஸ் வினா எழுப்பியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த 2 மிகப்பெரிய மின் திட்டங்கள் பேசப்பட்டு வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், கடந்த ஆண்டில் இது நிறைவேற்ற இயலாத திட்டம் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமியால் கைவிடப்பட்டு புதைகுழிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டே செய்யூரிலும், மரக்காணத்திலும் தேசிய அனல் மின் கழகத்தின் மிகப்பெரிய மின் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன் என்று கூறியுள்ள ராமதாஸ், இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் செய்யூரிலும், மரக்காணத்திலும் மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.